

தீபாவளியை முன்னிட்டு நியாய விலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பங்கேற்று, துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர்க் கடன் தள்ளுபடி, கொப்பரை தேங்காய் கொள் முதல், விதி எண்.110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
விவசாயிகளின் வருவாயை பெருக்கும் பொருட்டு, நடப்பு ஆண்டில் ரூ.6 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர்க் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, செப்டம்பர் 30-ம் தேதி வரை 1 லட்சத்து 65 ஆயிரம் விவ சாயிகளுக்கு (16 ஆயிரத்து 292 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உட்பட) ரூ.1123 கோடியே 46 லட்சம் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 20 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 46 கொள்முதல் நிலை
யங்களில் அக்டோபர் 7-ம் தேதி நிலவரப்படி 931 விவசாயிகளிடம் இருந்து 1169.725 டன் கொப்பரை தேங்காய், ரூ.6 கோடியே 96 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டு, உடனுக்குடன் விவசாயிகள் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் இயங்கி வரும் 73 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் அக்டோபர் 6-ம் தேதி வரை 19 ஆயிரத்து 231 டன் காய்கறிகள், ரூ.55 கோடியே 48 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது. மேலும் 293 மருந்தகங்கள் மூலம் ரூ.390 கோடியே 40 லட்சம் மதிப்பிலான மருந்துகள் விற்கப்பட்டுள்ளது.
கள ஆய்வு அவசியம்
தீபாவளியை முன்னிட்டு, கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் முழுமையாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களையும் சென்றடைவதை அதிகாரிகள் கள ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். தவறு செய்யும் பணியாளர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு செல்லூர் கே.ராஜூ கூறினார்.
இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.ஞானசேகரன், கூடுதல் பதிவாளர்கள் த.ஆனந்த், க.இராஜேந்திரன், இரா.கார்த்திகேயன், பா.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.