

வட சென்னையைக் கலக்கிய பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் குற்றப் பின்னணி உடைய தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்ய பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வட சென்னையைக் கலக்கிய பிரபல ரவுடியான தண்டையார்பேட்டை வ.உ.சி நகரை சேர்ந்த கல்வெட்டு ரவி என்ற ரவி (36), ஆர்.கே.நகர் வைத்தியநாதன் பாலம் அருகே பதுங்கி இருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. நேற்று மதியம் 1 மணிக்கு விரைந்து சென்ற தனிப்படை போலீஸார் அங்கு பதுங்கி இருந்த கல்வெட்டு ரவியை துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
2003-ல் கேளம்பாக்கத்தில் கன்னியப்பன், 2005-ல் தண்டை யார்பேட்டையில் வீனஸ், 2009-ல் புதுவண்ணாரப்பேட்டையில் சண்முகம் ஆகியோர் உள்ளிட்ட 6 பேரை கொலை செய்தது என்பது உட்பட கல்வெட்டு ரவி மீது 25 வழக்குகள் உள்ளன. அவர் 6 முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கல்வெட்டு ரவி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.