

ஆசிரியர்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில் 28-ம் தேதி வெள்ளிக்கிழமை ஈடு செய்யும் விடுமுறை அளிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, சங்கத்தின் மாநில தலைவர் பி.கே.இளமாறன், பள்ளிக் கல்வித்துறை செயலர் சபிதாவுக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலோர் தங்கள் சொந்த ஊரில் இருந்து 100 முதல் 200 கி.மீ தொலைவில் வசிக்கின்றனர். தீபாவளிப் பண்டிகையை, அவர்கள் தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவார்கள். தற்போது தீபாவளிக்கு முந்தைய நாள் வேலை நாளாக இருப்பதால் ஆசிரியர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே, தீபாவளிக்கு முந்தைய நாளான அக்டோபர் 28-ம் தேதியை ஈடு செய்யும் விடுமுறையாக அளிக்க வேண்டும். இதை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் அவர் கூறியுள்ளார்.