

கொட்டிவாக்கத்தில் 6 ஆண்டுகள் தங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த 6 பேரை கேரளாவில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்களில் சுவாலிக் முகமது(26) என்பவரும் ஒருவர். அவர், சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் எம்.ஜி.ஆர். நகர் அன்னை சத்யா சாலையில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 3 மாதங்களாக குடியிருந்துள்ளார்.
இது பற்றி அறிந்ததும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளத்திலிருந்து சென்னைக்கு விரைந்தனர். நேற்று முன்தினம் கொட்டிவாக்கம் சென்ற அவர்கள் சுவாலிக் முகமது தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர்.
சுவாலிக் முகமதுவின் மனைவி ஜிம்சின்னா(24), இரண்டரை வயது மகன் ஜின்னா ஆகியோர் வீட்டில் இருந்தனர். ஜிம்சின்னாவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜிம்சின்னா கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். 4 ஆண்டுகளுக்கு முன்பு சுவாலிக் முகமதுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து சென்னை போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
கேரளத்தில் பிடிபட்ட சுவாலிக் முகமதுவுக்கு மேலும் 2 பெயர்கள் உண்டு. யூசுப், அபு ஹன்சா ஆகிய பெயர்களிலும் அவர் வலம் வந்துள்ளார். இவர், சென்னையில் 6 ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார். சென்னை அண்ணாசாலையில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். நிறுவனத்தில் பணியாற்றுபவர்களிடமும் விசாரணை நடத்தப்படுகிறது. அப்போது, அவர் அங்கு யாரையாவது ஐ.எஸ். அமைப்பில் சேர்க்க முயற்சி மேற்கொண்டாரா அல்லது ஐ.எஸ். அமைப்பில் உள்ளவர்கள் யாரும் அங்கு இருக்கிறார்களா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கொட்டிவாக்கத்தில் உள்ள வீட்டில் மனைவியையும், மகனையும் வைத்து விட்டு இரவு நேரங்களில் முகமது வெளியில் தங்குவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் தாம் வெளியூர் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். சென்னையில் நண்பர்கள் சிலரது அறைகளில் தங்கி இருந்தபடியே இணையதளங்களில் சாட்டிங்கில் ஈடுபட்டு பலரிடம் தொடர்பில் இருந்திருக்கிறார்.
மனைவி ஜிம்சின்னா வாக்குமூலத்தில், “சுவாலிக் அடிக்கடி வெளியூர் செல்வதாக கூறுவார். அடிக்கடி அவருக்கு செல்போன் அழைப்புகள் வரும். அதில் பேசுபவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. விரைவில் தாம் வெளிநாடு செல்ல இருப்பதாகவும் அப்போது நான் குழந்தையோடு திருச்சூர் போய்விட வேண்டும் என்றும் கூறினார்” என தெரிவித்துள்ளார்.
தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் இதுகுறித்து கூறும்போது, “தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்ட அனைவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். சென்னை கொட்டிவாக்கத்தில் தங்கியிருந்த சுவாலிக் முகமது குறித்தும், அவர் வேலை செய்த நிறுவனத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை. இருந்தாலும் தொடர்ந்து தீவிர கண்காணிப்புடன் இருக்குமாறு அனைத்து போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.