

அரசுக்கு சொந்தமான நிலங்களில் புதிய தொழில்நுட்ப முறையில் மரக்கன்றுகள் நடும் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி நேற்று தொடங்கிவைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலையோரங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிலங்களில் நடுவதற்காக வனத்துறை மூலம் 3.3 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மரக்கன்றுகள் நடும் பணிகளில் புதிய தொழில்நுட்ப முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட களக்காட்டூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 2.45 ஏக்கரில் புதிய தொழில்நுட்பத்தில் 125 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி நேற்று தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார் கூறியதாவது:
புதிய தொழில்நுட்பத்தில் மரக்கன்றுக் காக தோண்டப்பட்டுள்ள பள்ளத்தின் ஒரு பகுதியில், 3 அடி உயர முள்ள பிவிசி பைப் நிற்கவைத்து மணல், இயற்கை எருக்கள் அதில் கொட்டி நிரப்பப்படுகிறது. பின்னர், பள்ளம் மண் கொட்டி மூடப்படும்.
சிறிது நேரம் கழித்து, பிவிசி பைப்பை மேலாக தூக்கியபடி பள்ளத்தில் இருந்து அகற்றுவோம். இதனால், பைப் வடிவில் எருக்கள் பள்ளத்தில் நிற்கும். இதன் மூலம், மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும்போது மரக்கன்றின் வேர் பகுதிக்கு ஈரப்பதம் நேராக சென்றடைகிறது. வேர் பகுதியில் தொடர்ந்து ஈரப்பதத்தை தக்கவைக்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பம் செயல்படுகிறது என்று அவர் கூறினார்.