8 மாவட்ட கடற்பகுதிகளில் 5 மைல் தூரத்துக்கு மீன் பிடிக்க தடை: ஆமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு உத்தரவு

8 மாவட்ட கடற்பகுதிகளில் 5 மைல் தூரத்துக்கு மீன் பிடிக்க தடை: ஆமைகளைப் பாதுகாக்க தமிழக அரசு உத்தரவு
Updated on
2 min read

கடல் ஆமைகளை பாதுகாக்கும் வண்ணம் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 4 மாதங்களுக்கு 5 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு நவீன விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த அரசு ஆணை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

கடந்த 2015 ஜனவரி 20-ம் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றில் ‘‘செத்து கரை ஒதுங்கிய 35 கடல் ஆமைகள் ’’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தியை தானாக முன்வந்து வழக்காக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இது தொடர்பாக பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த மனு ஏற்கெனவே தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மீன்பிடி வலையில் சிக்கும் கடல் ஆமைகள் உயிருடன் வெளியேறும் வகையில் ‘டிஇடி’ (Turtle escape device) என்ற நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மீன்பிடி வலைகள் தமிழக மீனவர்களிடம் இல்லை. ஆமைகள் இறப்பதற்கு இதுதான் முக்கிய காரணம் என்றும், கடல் ஆமைகளை பாதுகாக்கும் வண்ணம் ஒடிசா அரசு 20 கிமீ தூரத்துக்கு நவீன விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. அதுபோல தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவிக் கப்பட்டது.

இதையடுத்து தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, இது தொடர்பாக தமிழகத்திலும் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் அதே அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் ஓர் அரசு ஆணை சமர்ப்பிக் கப்பட்டது. தமிழக மீ்ன்வளத்துறை சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள அந்த அரசு ஆணையில், தமிழக கடல்சார் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், கடல் ஆமைகளின் இனப் பெருக்கம் மற்றும் கடல் ஆமை களைப் பாதுகாக்கும் வண்ணம் தமிழகத்தின் கடலோர மாவட்டங் களில் குறிப்பிட்ட 4 மாதங்களுக்கு மட்டும் 5 நாட்டிக்கல் மைல் தூரத்துக்கு நவீன விசைப்படகுகள் மூலமாகவோ நவீன மீன்பிடி இயந் திரங்களைக் கொண்டோ மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய கடலோர மாவட்டங்களில் கடல் ஆமைகளின் இனப்பெருக்க பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 30-ம் தேதி வரை 4 மாதங்களுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது’’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமல்லாது கிழக்கு கடற்கரை முழுவதும் அமல்படுத்த வேண்டும் என நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் டி.மோகன் கோரினார். அதையடுத்து நீதிபதிகள் இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பர் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in