Published : 20 Oct 2016 05:08 PM
Last Updated : 20 Oct 2016 05:08 PM

சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றக் கூடாது: ஸ்டாலின்

சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட மோடி உத்தரவிட வேண்டும் என்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் தன்னாட்சி நிறுவனமாக இயங்கி வரும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற மத்திய ரசாயனம் மற்றும் உரத் தொழில்துறை அமைச்சகம் முயற்சி மேற்கொண்டிருப்பதாக, சிப்பெட் பணியாளர் சங்க நிர்வாகிகள் என்னிடம் முறையிட்டார்கள்.

தமிழகத்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை மாற்ற நினைக்கும் மத்திய அரசின் இந்த முயற்சி அதிர்ச்சியளிக்கிறது. 1968 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிறுவனம் நாடு முழுவதும் 28 மையங்களுடன் மிகச் சிறப்பாக லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் சுமார் எட்டு ஏக்கர் நிலப் பரப்பளவில் இருக்கும் சிப்பெட் நிறுவனம் தொழிற்பேட்டைக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

பிளாஸ்டிக் கல்வியில் பட்டயப் படிப்பு, முதுகலைப் படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பு உள்ளிட்ட 14 நீண்ட கால பயிற்சி திட்டங்களை அளித்து வரும் இந்த நிறுவனம், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 2015-16 கல்வியாண்டில் மட்டும் 13 ஆயிரத்து 376 மாணவர்கள் இந்த நிறுவனத்தின் கீழ் செயல்படும் மையங்களில் சேர்ந்துள்ளார்கள். இந்நிறுவனத்தில் படித்தவர்களில் 80 சதவீதம் பேருக்கு பல்வேறு பிளாஸ்டிக் நிறுவனங்களில் வேலை கிடைத்து வருகிறது.

அதுமட்டுமின்றி இந்த சிப்பெட் நிறுவனம் லாபத்தில் இயங்கும் தன்னாட்சி நிறுவனம் ஆகும். 2015-16 ஆம் ஆண்டு அறிக்கையிலேயே இந்நிறுவனத்தின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.120.69 கோடி என்று கூறப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர்கள் மற்றும் புகழ்மிக்க பேராசிரியர்களைக் கொண்டுள்ள சிப்பெட் நிறுவனம் பிளாஸ்டிக் கல்வியில் சாதனை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தில் குறுகிய கால பயிற்சி பெற்றோர் மட்டும் 34,768 பேர் என்றும் மத்திய அரசின் அறிக்கையிலேயே பெருமைபடக் கூறப்பட்டுள்ளது.

இவ்வளவு சீரும் சிறப்பும் மிக்க சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை சென்னையிலிருந்து மாற்றுவதற்கு ஒவ்வொரு முறையும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அது தடுத்து நிறுத்தப்பட்டது. ஆனால் இப்போது பாஜக தலைமையிலான மத்திய அரசும் அதே முயற்சியில் இறங்கியுள்ளது.

குறிப்பாக மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருக்கும் அனந்தகுமார் இந்த முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சரான அனந்தகுமார் தன் பங்கிற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தமிழ்நாட்டில் – குறிப்பாக தமிழகத்தின் தலைநகரில் உள்ள தன்னாட்சி நிறுவனமான சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்ற திட்டமிட்டு செயல்படுவது வேதனையளிக்கிறது.

தமிழகத்தின் பாரம்பரிமிக்க வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை; தமிழக மருத்துவக் கல்வி மாணவர்கள் நலன் குறித்து கவலைப்படாமல் நீட் தேர்வு; நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் நெய்வேலியை எடுத்து விட்டு என்.எல்.சி என்று பெயர் மாற்றம், சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி என தொடர்ந்து இப்படி தமிழகத்தின் பெருமைகள் எந்தவிதத்திலும் நிலைத்து நின்றுவிடக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் இது போன்ற நடவடிக்கைகளை மத்தியில் உள்ள அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.

அந்தப் பட்டியலில் இப்போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் அனந்தகுமாரும் சேர்ந்திருக்கிறார். சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை எப்படியாவது டெல்லிக்கு மாற்றி தமிழகத்தின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்க முயலுகிறார். மத்திய அமைச்சரின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியது.

காவிரியில் தமிழகத்தை வஞ்சிப்பதற்கு தன் மாநிலத்திற்கு துணை நின்று உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கே எதிராக செயல்பட்டவர் மத்திய அமைச்சர் அனந்தகுமார். அதேபோல், காவிரி தீர்ப்பை நிறைவேற்றாத கர்நாடக அரசின் மீது மத்திய அரசு எவ்வித அழுத்தத்தையும் கொடுத்து விடாமல் தடுத்த மத்திய அமைச்சர்களில் அனந்தகுமாரும் ஒருவர். இப்போது தன் இலாகாவின் கீழ் செயல்படும் சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை டெல்லிக்கு மாற்ற பகீரத முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

லாபத்தில் இயங்கும் சிப்பெட் நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதற்கும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தை மாற்றுவதற்கும், 2500க்கும் மேற்பட்ட பணியாளர்களும், தொழிலாளர்களும் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள்.

ஆகவே சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை மாற்றும் முடிவினையும், தனியாருக்கு தாரை வார்க்கும் எண்ணத்தையும் மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடனடியாக கைவிட வேண்டும்.

மத்திய அமைச்சர் தொடர்ந்து அந்த முயற்சியில் ஈடுபடுவாரேயானால் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு சிப்பெட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x