

காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தனர். மத்திய அரசின் முடிவால் தமிழகத்தில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நீர்வளத் துறை அமைச்சர் உமாபாரதி, பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோரிடம் நேரில் எடுத் துரைப்பது என அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
காவிரியில் தமிழகத்துக்கு உரிய தண்ணீர் கிடைக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர்கள் தீவிரமாக ஆலோசித்து அறிக்கை தயாரித்துள்ளோம். இதை பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களிடம் நேரில் அளிக்க இருக்கிறோம். இதற்காக என்னுடன் (தமிழிசை சவுந்தரராஜன்) சேர்த்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த முயற்சியும் எடுக்காத திமுக, இப்போது உண்ணாவிரதம் அறிவித்துள்ளது ஏமாற்று வேலையாகும்.
இவ்வாறு தமிழிசை கூறியுள்ளார்.