Last Updated : 25 Aug, 2022 02:49 AM

 

Published : 25 Aug 2022 02:49 AM
Last Updated : 25 Aug 2022 02:49 AM

கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடமாற்ற முற்பட்டால் தொடர் உண்ணாவிரதம் - எடப்பாடி பழனிசாமி

கோவை: கோவை வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை இடம் மாற்ற செய்ய முற்பட்டால் கோவை மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி தமிழக அரசை எச்சரித்துள்ளார்.

கோவையில் அதிமுக பிரமுகரின் இல்ல நிகழ்வில் கலந்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "கோவை மாநகர மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கடந்த ஆட்சியில் வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பணிகள் தொடங்கின. இந்நிலையில், திமுக குடும்பத்துக்கு நெருக்கமான ரியல் எஸ்டேட் அதிபர், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வாங்கி குவித்துள்ளார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அந்த பகுதிக்கு மாற்றினால், நிலத்தின் மதிப்பு உயரும் என்பதால் பேருந்து நிலையத்தை இடம்மாற்ற முடிவு செய்துள்ளனர்.

இதற்கு வேறு எந்தக் காரணமும் இல்லை. மக்களின் வரிப் பணத்தை வீணடிக்கின்றனர். அங்கு கட்டப்பட்ட கட்டிடத்தை என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. பேருந்து நிலையத்தை மாற்ற முற்பட்டால் கோவை மாநகராட்சியில் தொடர் உண்ணாவிரதப்போராட்டம் நடைபெறும். கடந்த ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. தற்போது அதை கிடப்பில் போட்டுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதை உரிய காலத்தில் நிறைவேற்றியிருந்தால் தற்போது பல ஏரிகளை நிரப்பியிருக்கலாம். வறண்ட பகுதிகள் பாசன வசதி பெற்றிருக்கும். ஆனால், பருவகால மழைநீர் கடலில் சென்று கலந்துவருகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க தொடங்கப்பட்ட மேற்புற வழிச்சாலை திட்டத்தையும் கிடப்பில் போட்டுள்ளனர். கோவை விமானநிலைய விரிவாகத்துக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை. அந்த பணிகள் முடங்கியுள்ளன. ஆனைமலை-நல்லாறு திட்டத்திலும் இந்த அரசு ஆர்வம் இல்லாமல் உள்ளது. எந்த திட்டத்தையும் நிறைவேற்றாத இந்த ஆட்சியில் எதற்கெடுத்தாலும் ஒரு குழுவை மட்டும் அமைத்து வருகின்றனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் 38 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே கடந்த ஆட்சியில் பட்டா அளித்தது, கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் உள்ளிட்ட பல்வேறு திட்ட பயனாளிகளை அழைத்து வந்து, கோவையில் 1.62 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக தவறான தகவல்களை அளிக்கின்றனர்.

ஆறுகுட்டியை நம்பி அதிமுக இல்லை. சாதாரண தொண்டர்கள் என்னை சந்திக்கலாம். முதல்வரின் ஸ்டாலின் வீட்டு வாசலைக்கூட ஆறுகுட்டியால் நெருங்க முடியாது. ஆதாயம் தேடும் வகையில் கட்சி மாறியுள்ளார்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x