Published : 24 Aug 2022 11:55 AM
Last Updated : 24 Aug 2022 11:55 AM

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் கைது எதற்காக? - உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி வழக்கில் பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த காரணங்களை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மரணமடைந்தார். இதுதொடர்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. பள்ளியில் நடந்த சம்பவம் குறித்த கண்காணிப்புக் கேமிராவில் பதிவான காட்சிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 38 நாட்களாக சிறையில் இருந்துவரும் நிலையில், இன்னும் தங்களை நீதிமன்ற காவலில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள்," மாணவியின் உடல் இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் மீது என்ன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றே தெரியவில்லை. மாணவியின் மரணத்திற்கும் தங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை" என்று வாதிடப்பட்டது.

அப்போது மாணவியின் பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், " தங்கள் மகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம்" என்ற சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, " இந்த வழக்கில் காவல்துறையின் நிலைப்பாடுகள் என்ன?" என்று கேள்வி எழுப்பினார். அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இதுதொடர்பாக விளக்கம்பெற்று தெரிவிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

அப்போது நீதிபதி, இந்த மனுதாரர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? பள்ளியின் தாளாளர் மற்றும் ஆசிரியர்களாக இருப்பதற்காக கைது செய்யப்பட்டனரா? உள்ளிட்ட விவரங்களை அறிந்து வந்திருக்க வேண்டும் என்று காவல்துறை தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர்கள் எதற்காக கைது செய்யப்பட்டனர் என்பது குறித்த காரணத்தை தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதி, விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு (ஆக.26) ஒத்திவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x