

திருத்தணி அதிமுக கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திமுக பிரமுகர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததை அடுத்து போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சன்னதி தெருவை சேர்ந்தவர் ஆப்பிள் ஆறுமுகம் என்கிற கே.ஆறுமுகம்(42). திருத்தணி நகராட்சியின் 13-வது வார்டு கவுன்சிலராகவும், திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். நடக்க இருந்த உள்ளாட்சித் தேர்தலில் அதே வார்டில் போட்டியிட அதிமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி திருத்தணி- இந்திரா நகர் பகுதியில் காரில் சென்றவரை வழிமறித்து 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதையடுத்து திருத்தணி போலீஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் திருத்தணி பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார், ஆட்டோ ஓட்டுநரான ஜாகீர் உசேன், பிரேம்குமார், சின்னசாமி ஆகிய 4 பேரை கடந்த 13-ம் தேதி இரவு கைது செய்தனர்.
இந்நிலையில் திருத்தணியைச் சேர்ந்த வடிவேல், ராஜேஷ் ஆகிய இருவரை நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
ஆந்திர மாநில மதுபாட்டில் பதுக்கி விற்பனை மற்றும் நிலம் தொடர்பாக ஆறுமுகத்துக்கும் திருத்தணி பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவருக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக இக்கொலை நடந்ததாக கூறப்படும் நிலையில், கொலையின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் திமுக பிரமுகர் பெங்களூரூவில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, தனிப்படை போலீஸார் பெங்களூரு விரைந் துள்ளனர். அவர் சிக்கினால்தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.