

உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடிகிறது. நாளை முதல் உள்ளாட்சி நிர்வாகங்களை தனி அதிகாரிகள் கவனிக்க உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபரில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தது. இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூ ராட்சி தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் என சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதவிகளுக்கு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடி வடைகிறது.
புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக அக்டோபர் 17, 19 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. அதற்கான வேட்மனு தாக்கலும் நடந்து முடிந்தது.
இதற்கிடையே, பழங்குடியின ருக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என திமுக தரப்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கையை ரத்து செய்தது. மேலும் புதிய அறிவிக்கை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப் பட்டுள்ளது. மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கவில்லை. இதனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் 24-ம் தேதியுடன் (இன்று) முடிவடைவதால், நிர்வாகத்தை கவனிக்க தனி அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான அவசர சட்டத்தை கடந்த 17-ம் தேதி தமிழக ஆளுநர் கொண்டுவந்தார். கடந்த 19-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழிலும் அன்றே வெளியானது.
மாவட்ட ஆட்சியர்கள்
இதன்படி, மாநகராட்சி, நகராட்சிகளில் ஆணையர்களும். பேரூராட்சிகளில் செயல் அலு வலர்களும் தனி அதிகாரிகளாக இருந்து நிர்வாகத்தை கவனிப்பர். ஊராட்சி அளவிலும் தனி அதி காரிகள் நியமிக்கப்படுகின்றனர். ஒட்டுமொத்த ஊராட்சிகளின் நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர்கள் கவனிப்பர்.
உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் முடி வடைகிறது. இதையடுத்து, எந்தெந்த நிர்வாகத்தை யார் கவனிப்பது என்பதற்கான அரசாணை, இன்று வெளியிடப்படும் என தெரிகிறது. அரசாணை வெளியிடப்பட்டதும், நாளை முதல் உள்ளாட்சி நிர்வாகத்தை தனி அதிகாரிகள் கவனிப்பார்கள் என நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனி அதிகாரிகள் அடுத்த 6 மாதத்துக்கு அல்லது உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை இப்பொறுப்பில் இருப்பார்கள்.
ஊராட்சிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், 5 ஊராட்சிகளுக்கு ஒரு தனி அதிகாரி வீதம் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு வாகனம், ஒரு ஊராட்சிக்கு 50 லிட்டர் டீசல் என 250 லிட்டர் டீசல், தேவையான வசதிகள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது தொடர்பான தகவல்களும் அரசாணையில் இடம்பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.