

பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு முக்கிய விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி சார்பில் ‘தென்மாநிலங் களில் ஆட்சிமொழி செயலாக்கம்’ என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூரில் நேற்று கருத்தரங்கு நடந்தது. சாகித்ய அகாடமி செயலாளர் கே.சீனிவாஸ்ராவ் வரவேற்புரை ஆற்றினார். தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி, இந்திய கலாச்சார அமைச்சகத்தின் இயக்குநர் வேத்பிரகாஷ், இந்தி மொழி ஆய்வாளர் பி.கே.பாலசுப்பிரமணியன் உட்பட பலர் பேசினர்.
இந்நிகழ்ச்சியின்போது தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோக்ரி நிருபர்களிடம் கூறும்போது, “மக்களின் தேவைக்கு ஏற்றவாறு வழித்தடங்களைத் தேர்வு செய்து ஏற்கெனவே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப் பினும் தேவையை அடிப்படையாக கொண்டு சில விரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். மேலும், பண்டிகை நாட்களில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ரூ.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான பணிகள் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகின்றன’’ என்றார்.