

திருச்சி: திருச்சி தந்தை பெரியார் அரசுகல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் சக பேராசிரியர்கள் 17 பேர் புகார் அளித்துள்ளனர்.
திருச்சி தந்தை பெரியார் அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. படித்த மாணவி ஒருவர், ஒரு துறைத் தலைவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், உடல் மற்றும் மன ரீதியாக பல்வேறு துன்புறுத்தல்கள் செய்ததாகவும் முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதில் மாணவியின் புகாரில் உண்மை இருப்பதாக தெரியவந்ததால், சம்பந்தப்பட்ட துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஆக.3-ம் தேதி கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே, கல்லூரி சார்பில் அறிக்கை அனுப்பப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆகியும், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ள இந்த சூழலில், மாணவிக்கு ஆதரவாக ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பும், துறைத் தலைவருக்கு ஆதரவாக எஸ்.சி எஸ்.டி பேராசிரியர்கள் சங்கமும் களமிறங்கின. இந்நிலையில், கல்லூரியின் ஆங்கிலத் துறையில் பேராசிரியர்கள் அனைவரும் (17பேர்) கல்லூரி முதல்வரைச் சந்தித்து, துறைத் தலைவரின் செயல்பாடுகள் தங்களுக்கு மன உளைச்சலைத் தருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கடிதம் கொடுத்துள்ளனர்.