கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு அதிகரிப்பு: வினாடிக்கு 500 கனஅடி நீர் வருகிறது

கண்டலேறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் கிருஷ்ணா நீரின் அளவு அதிகரிப்பு: வினாடிக்கு 500 கனஅடி நீர் வருகிறது
Updated on
1 min read

சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள கிருஷ்ணா நதி நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் தேவைக்காக தெலுங்கு கங்கை ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் இரு கட்டங் களாக 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீரை கண்டலேறு அணையிலிருந்து ஆந்திர அரசு திறந்து விடும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீரை அணையிலிருந்து திறந்து விடவில்லை.

நடப்பு ஆண்டுக்கு முதல் கட்டமாக ஜூலை 1-ம் தேதி முதல், கண்டலேறு அணையில் இருந்து திறந்து விடவேண்டிய கிருஷ்ணா நதிநீரை ஆந்திர அரசு திறந்துவிடாமல் இருந்தது. இதனால் சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீர் இருப்பு வெகுவாக குறைந்தது. இந்நிலையில், ஆந்திர பகுதிகளில் கடந்த மாதம் கொட்டித் தீர்த்த கனமழை யால், தற்போது ஆந்திராவில் உள்ள சைலம் மற்றும் சோமசீலா அணை, கண்டலேறு அணைகளில் போதிய நீர் இருப்பு உள்ளது. ஆகவே, தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி களின் கோரிக்கையை ஏற்று, சென்னை யின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதி நீரை, கடந்த 10-ம் தேதி வினாடிக்கு 200 கன அடி வீதம் கண்டலேறு அணை யிலிருந்து கிருஷ்ணா கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு இன்று வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று மாலை 5 மணி நிலவரப்படி, கண்டலேறு அணையிலிருந்து 70-வது கிமீ தூரம்தான் வந்துள்ளது. கால்வாய் வறண்டு காணப்படுவதால் கிருஷ்ணா நீர் மிக மெதுவாக வருகிறது என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் கிருஷ்ணா நதி நீரின் அளவை அதிகரிக்கும்படி தமிழக பொதுப்பணித் துறையினரின் கோரிக்கையை ஏற்ற ஆந்திர அரசு திறந்து விடப்படும் நீரின் அளவை வினாடிக்கு 500 கன அடியாக அதிகரித்துள்ளது.

அதன்படி நேற்று காலை 6 மணி முதல், கண்டலேறு அணையிலிருந்து வினாடிக்கு 500 கன அடி கிருஷ்ணா நதி நீர் சென்னையின் குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா கால்வாயில் வந்துக் கொண்டிருக்கிறது. நாளை அல்லது 17-ம் தேதி தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டுக்கு நீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னர், அங்கிருந்து 25 கிமீ தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு ஒரிரு நாளில் வந்தடையும் என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in