நகைக்கடை அதிபரை கட்டிப்போட்டு ரூ.10 லட்சம், 5 கிலோ தங்கம் கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர்: 3 மாதத்துக்கு பிறகு துப்பு துலங்கியது

நகைக்கடை அதிபரை கட்டிப்போட்டு ரூ.10 லட்சம், 5 கிலோ தங்கம் கொள்ளையடித்த 5 பேர் சிக்கினர்: 3 மாதத்துக்கு பிறகு துப்பு துலங்கியது
Updated on
1 min read

ராயபுரத்தில் நகைக்கடை அதிபரை கட்டிப்போட்டு ரூ.10 லட்சம், ஐந்தரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில் 5 பேர் சிக்கியுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை ராயபுரம் ஆதாம் சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் ஜெயின். இவர் தனது வீட்டின் கீழ் தளத்தில் நகைக்கடை நடத்தி வந்தார். கடந்த ஜூன் 10-ம் தேதி நகை வாங்குவதுபோல கடைக்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல், ரமேஷ் ஜெயினை கத்தியைக் காட்டி மிரட்டி கட்டிப் போட்டனர். வாயை டேப்பால் ஒட்டினர்.

பின்னர் கடையில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், ஐந்தரை கிலோ தங்க நகைகளைக் கொள்ளை யடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். கொள்ளையரைப் பிடிக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

ராயபுரம் எம்.எஸ்.கோயில் தெருவில் உள்ள ஒரு கடையில் வைக்கப்பட்டுள்ள கேமராவில் கொள்ளையர்கள் பைக்கில் தப்பிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பைக் எண்ணை வைத்து தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்டது நீலாங்கரை சரவணன், பூம்புகார் நகர் கெண்டர் ஸ்டாலின், திருவான்மியூர் வெங்கடேசன் என்பது உறுதி செய்யப்பட்டது. கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது ரமேஷ் ஜெயினின் எதிர்வீட்டைச் சேர்ந்த ரஞ்சித், அவரது நண்பர் பார்த்திபன் என தெரியவந்தது. பார்த்திபன் அதே பகுதியில் கால்சென்டர் நடத்தி வருகிறார். அவர்கள் 5 பேரையும் பிடித்த தனிப்படை போலீஸார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துணை ஆணையர் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரையும் பிடித்துள்ளோம். அவர்களிடம் இருந்து நகை, பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டியுள்ளது. பறிமுதல் செய்ததும் கைது செய்வோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in