Published : 24 Aug 2022 04:30 AM
Last Updated : 24 Aug 2022 04:30 AM

தமிழக காவல் துறை எஸ்.ஐ. பணிக்கான உடல் தகுதி தேர்வில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு

சென்னை

தமிழக காவல் துறையில் உதவிஆய்வாளர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், இளைஞர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ.) பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 197 மையங்களில் நடைபெற்ற இந்த தேர்வை ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 949 ஆண்கள், 43 ஆயிரத்து 949 பெண்கள், 43 திருநங்கைகள் என மொத்தம் 2 லட்சத்து 21 ஆயிரத்து 213 பேர் எழுதியிருந்தனர்.

சென்னையில் மட்டும் 7,080 ஆண்கள், 1,506 பெண்கள் என 8 ஆயிரத்து 586 பேர் எழுதினர். இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, உடல்தகுதி தேர்வு அந்தந்த மாவட்ட போலீஸ் ஆயுதப்படை மைதானங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மண்டலத்தில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

எஸ்ஐ தேர்வை நேரடியாக எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு பகலிலும், தேர்ச்சியடைந்த காவல் துறையை சேர்ந்தவர்களுக்கு மதியமும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற்றது. அதன் பின்னர்1,500 மீட்டர் இலக்கை 7 நிமிடங்களில் அடைய வேண்டும் என்றஉடல் தகுதித் தேர்வு நடத்தப் பட்டது.

ஒரு வருட பயிற்சி

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு இன்று (புதன்கிழமை) இதே மைதானத்தில் நீளம் - உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், கயிறு ஏறுதல் போன்ற போட்டிகளுடன் உடல்திறன் தேர்வு நடைபெற இருக்கிறது.

இதிலும் வெற்றி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப் படுவார்கள். அதிலும் வெற்றி பெறுபவர்கள் எஸ்ஐ பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு வருட பயிற்சிக்கு பின்னர்அவர்களுக்கு காவல் நிலையத்தில் பணி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x