Published : 24 Aug 2022 04:40 AM
Last Updated : 24 Aug 2022 04:40 AM

கொசப்பேட்டையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டை சச்சிதானந்தம் தெருவில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி, விசாரணை நடத்திய மாநகராட்சி அதிகாரிகள், வீட்டைகாலி செய்யும்படி அந்த அடுக்குமாடிகளில் குடியிருப்பவர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது.

இந்த நோட்டீஸை எதிர்த்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வீட்டின் உரிமையாளர்களான ரஹ்மத்துனிஷா, ராமச்சந்திரன், பத்மாவதி, மதன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: சட்டவிரோதமாக விதிகளை மீறி கட்டிடங்களை கட்டிவிட்டு, பின்னர் அதை வரைமுறைப்படுத்த வேண்டும் என கோருவதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது.

அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிடப் பணி முடிப்பு சான்றுபெற்ற பிறகே குடியிருப்புகளை விற்க வேண்டும் என கட்டுமானநிறுவனங்களிடம் அரசு உத்தரவாதம் பெற வேண்டும். விதிமீறல்கள் இருந்தால் அதிகாரிகள் கட்டிடப் பணி முடிப்பு சான்றிதழ்களை வழங்கக் கூடாது. அதன் பிறகேமின்சாரம், குடிநீர் இணைப்புகளை வழங்க வேண்டும்.

விதிமீறல்களை தடுக்காவிட்டால் அரசின் திட்டமிட்ட வளர்ச்சி என்பது பகல் கனவாகிவிடும். வங்கிக் கடன் பெற்று வீடுகளை வாங்கியபிறகு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் வீடு வாங்கியவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த வழக்கில் குடியிருப்புவாசிகளுக்கு கட்டுமான நிறுவனம் மாற்று இடம் வழங்க வேண்டும்.

தற்போதுள்ள கட்டிடத்தை 6 வாரங்களில் அந்நிறுவனம் அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பிறகு இரு வாரங்களில் அந்த கட்டிடத்தை இடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x