

நேரு பூங்கா எழும்பூர் சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் வரும் டிசம்பரில் தொடங்கவுள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 24 கி.மீ. தூரத்துக்கு (19 ரயில் நிலையங்கள்) சுரங்க வழிப்பாதை வழியாக இயக்கப்படவுள்ளது. தற்போது, விமான நிலையம் சின்னமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினமும் சராசரியாக 18 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகின்றனர்.
அடுத்த கட்டமாக, கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்காக, கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது, விமான நிலையம் சின்னமலை, பரங்கிமலை - ஆலந்தூர் கோயம்பேடு இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதனால், தினமும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 15,000 முதல் 18,000 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக, கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில்கள் சோதனை அடிப்படையில் இயக்கி வருகிறோம். வரும் நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசம்பரில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழு வந்து ஆய்வு நடத்தவுள்ளது. அக்குழுவின் ஒப்புதல் கிடைத்தவுடன், ஜனவரியில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
இதேபோல், ரயில் போக்குவரத்தின் முக்கிய இணைப்புகளாக இருக்கும் நேரு பூங்கா - எழும்பூர் சென்ட்ரல் இடையே இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. கீழ்த்தளத்தில் ரயில் நிலையமும், முதல் தளத்தில் டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் இருக்கும். எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு செல்லும் வகையில் ரூ.2 கோடி செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. இது 15 அடி அகலமும், 40 மீட்டர் நீளமும் கொண்டதாக இருக்கும்.
சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் ஒட்டுமொத்த பணி களில் 70 சதவீதம் நிறைவ டைந்துள்ளன. நேரு பூங்கா எழும்பூர் சென்ட்ரல் இடையே வரும் டிசம்பரில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்க வுள்ளது. பின்னர், ரயில்வே ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்றவுடன், அடுத்த ஆண்டு ஜூனில் இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.