

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், சந்தேக நபர்களின் படங்களை நேற்று இரவு வெளியிட்டனர்.
கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சி.சசிக்குமார்(36), கடந்த செப். 22-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களின் படங்களை சிபிசிஐடி போலீஸார் நேற்று இரவு வெளியிட்டனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீ ஸார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சசிக்குமார் கொலை வழக்கு தொடர்பாக, பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராக்களின் (சிசிடிவி) பதிவுகளை ஆராய்ந்து வருகிறோம். கொலை நிகழ்ந்த தினத்தன்று இரவு 10 முதல் 10.30 மணி வரையில், கோவை காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள ஒரு கடை யில் பொருத்தப்பட்டுள்ள கேமராக் களை ஆய்வு செய்தபோது, சந்தேகப்படும் நபர்கள் சிலரின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் குறித்த விவரங்கள், வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எனவே, கேமராக்களில் பதிவாகியுள்ள, சந்தேக நபர்களின் படங்களை சிபிசிஐடி வெளியிட்டுள்ளது. இப்படங்களில் உள்ளவர்கள் கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில், பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள சிறப்பு புலனாய்வுப் பிரிவை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்களும், மேற்கண்ட நபர்கள் குறித்து விவரம் தெரிந்தால், சிபிசிஐடி-க்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வழக்கு குறித்த தகவல்களை, சென்னை சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜி.ஸ்டாலினிடம் 94981-04441 என்ற செல்போன் எண்ணிலோ அல்லது sidcbcidcbe@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலோ தெரிவிக்கலாம்.