

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அகழாய்வில் 80-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்கத்தால் செய்யப்பட்ட நெற்றிப் பட்டலம், இரும்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட அம்புகள், வாள், ஈட்டி, சூலம், தொங்கவிட்டான் போன்ற ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன.
தற்போது வித்தியாசமான முதுமக்கள் தாழி மூடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கிடைத்த முதுமக்கள் தாழி மூடிகள் கூம்பு வடிவில் இருந்த நிலையில், தற்போது ஒரு முதுமக்கள் தாழியின் மூடி மட்டும் தட்டை வடிவில் உள்ளது. தட்டை வடிவிலான பகுதியில் பனை ஓலைப்பாய் அச்சு போன்ற பதிவுகள் காணப்படுகின்றன.
இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதுமக்கள் தாழிகள் செய்யும் போது, அதனை காயவைப்பதற்கு பனை ஓலைப்பாய் அல்லது கோரைப்பாயின் மேல் வைத்திருக்கலாம் என கருதப்படுகிறது.
முதுமக்கள் தாழி மூடியில் காணப்படுவது பனை ஓலை பாயின் அச்சு என்றால் 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் பனை ஓலைபொருட்களை பயன்படுத்தியிருப்பது உறுதியாகும் என, தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.