

சென்னை: புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழகத்துக்கு உதவ வேண்டும் என்று சான்பிரான்சிஸ்கோ தமிழ் மன்ற நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.
கனடாவின் ஹாலிபாக்ஸ் நகரில் 65-வது காமன்வெல்த் மக்களவை மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர்வட அமெரிக்கா சென்றுள்ளனர். இப்பயணத்தின் ஒரு பகுதியாக,கலிஃபோர்னியா மாநிலம், கேக்ரமெண்டோ மற்றும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதி தமிழ்மன்றம் சார்பில் அப்பாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி, சிலிகான் ஆந்திரா பல்கலை வளாகத்தில் இந்திய தூதர் டி.வி.நாகேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அப்பாவு பேசியதாவது:
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாமானிய மக்களின் பிரச்சினைகளில் முதல்வர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். வளைகுடா பகுதிகளில் பணிபுரியும் பலர் மென்பொருள் துறையில்தான் உள்ளனர். தமிழகத்தில் தொடங்கப்பட்ட ‘நான் முதல்வன்’ திட்டம் மாணவர்களுக்கான வழிகாட்டியாக விளங்குகிறது.
புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்தியாவுக்கு, குறிப்பாக தமிழகத்துக்கு உதவ வேண்டும். தமிழக சட்டப்பேரவை செயல்பாடுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பேரவையில் இதுவரை நடைபெற்ற நிகழ்வுகள் அனைத்தும் வெகு விரைவில் சமூக வலைதளங்களில் கிடைக் கும். இவ்வாறு அவர் பேசினார். சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசன், தமிழ்மன்ற தலைவர் குமார் நல்லுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.