Published : 10 Oct 2016 10:29 AM
Last Updated : 10 Oct 2016 10:29 AM

தீபாவளி சிறப்புப் பேருந்து முன்பதிவுக்காக 30 தனி கவுன்ட்டர்கள் திறக்க முடிவு

தீபாவளிப் பண்டிகை வரும் 29-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. குறிப்பாக, சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வரும் 26, 27, 28 ஆகிய தேதிகளில் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் இரு மாநில அரசுப் பேருந்துகளும் அண்ணாநகரில் (மேற்கு) இருந்து இயக்கப்படுகிறது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்து களும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்தும், பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும் வகையில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், முன்பதிவு செய்யாத பயணிகள் அனைவரும் 26 முதல் 28-ம் தேதி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ள தற் காலிக பேருந்து நிலையங்களுக்கு சென்று பயணம் மேற்கொள்ளலாம்.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்திருக்கும் பயணிகள், ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று, அங்கு தாங்கள் முன்பதிவு செய்த நேரத்துக்குரிய பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள், ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பண்டிகை நேர நெரிசலைக் குறைக்க சென்னையில் முதல்முறையாக போக்குவரத்து மாற்றங்கள் செய்து பேருந்துகளை பிரித்து இயக்குகிறோம். இந்த மாற்றங்கள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 1,200 பேருந்து நிலையங்களில் விளம்பரப் பலகைகள் வைக்கப்படும். மேலும் எப்.எம் ரேடியோ, முகநூல், வாட்ஸ்-அப் போன்ற சமூக வளைத்தளங்களிலும் விளம்பரம் செய்ய உள்ளோம்.

கடந்த தீபாவளி பண்டிகையின்போது மொத்தம் 11,959 பேருந்து சர்வீஸ்கள் இயக்கப்பட்டன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு இந்த ஆண்டும் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். வழக்கமான டிக்கெட் முன்பதிவு மையங்களை தவிர கோயம்பேடு, பூந்தமல்லி, தாம்பரம் சானடோரியம் ஆகிய பேருந்து நிலையங்களில் மொத்தம் 30 சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்படும். மேலும், www.tnstc.in என்ற இணையதளத்திலும் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x