

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நெல்லித்தோப்பு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை இன்று (வெள்ளிக்கிழமை) காலை தொடங்கினார்.
புதுச்சேரி மாநில முதல்வராக கடந்த ஜூன் 6-ம் தேதி நாராயணசாமி பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவர் மே-16 நடைபெற்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.
இந்நிலையில், அந்த மாநிலத்தின், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்தார்.
நெல்லித்தோப்பு தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவாகவே ஜான்குமார் ராஜினாமா செய்திருந்தார்.
எனவே, நெல்லித்தோப்பு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், நாராயணசாமி அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
இதனையடுத்து, இன்று காலை அவர் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
நெல்லித்தோப்பு தொகுதிக்கும், தமிழக தொகுதிகளை போலவே, அக்டோபர் 26-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது.
நவம்பர் 2-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடையும். நவம்பர் 5-ம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் ஆகும். நவம்பர் 19-ல் தேர்தல் நடைபெறுகிறது நவம்பர் 22-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.