Published : 24 Aug 2022 04:26 AM
Last Updated : 24 Aug 2022 04:26 AM

பரிதா, கே.எச். குழுமத்துக்குச் சொந்தமான தோல் தொழிற்சாலை உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித் துறை சோதனை

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த பரிதா மற்றும் கே.எச். குழும தோல் தொழிற்சாலைகளில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஜார் நாகேஸ்வரன் கோயில் பகுதியில் மக்கா ரபீக் அகமது என்பவருக்குச் சொந்தமான, பரிதா குழும தோல் பதனிடும் தொழிற்சாலைகள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன.

இக்குழுமத்துக்குச் சொந்தமாக ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் காலணி, பர்ஸ், பெல்ட், கைப்பைகள், தோல் ஆடைகள் உள்ளிட்டவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வாணியம்பாடி, ஆலங்காயம், நிம்மியம்பட்டு, குருராஜபாளையம் கூட்டுச்சாலை, அகரம், ஆசனாம்பட்டு, பேரணாம்பட்டு, ராணிப்பேட்டை, சென்னையில் பரிதா குழும தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சென்னை வருமான வரித் துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை ஆம்பூர், எம்.சி.ரோடு, துத்திப்பட்டு, சின்னவரிகம், மோட்டுக்கொல்லை உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் 10 தொழிற்சாலைகளில் சோதனையில் ஈடுபட்டனர். இதையொட்டி, 80-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பரிதா குழும உரிமையாளர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதேபோல, சென்னை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் உள்ள, பரிதா குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்றது.

திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்துக்காக திருப்பத்தூர் மாவட்டத்துக்கு வந்தால், ஆம்பூரில் பரிதா குழுமத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதியில்தான் ஓய்வெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல, வேலூர். ராணிப்பேட்டை மாவட்டங்களில் செயல்படும், முன்னணி தோல் தொழில் நிறுவனமான கே.எச். குழுமத்திலும் வருமான வரி சோதனை நடைபெற்றது.

வேலூர் மாவட்டம் பெருமுகை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் 2 இடங்கள், ஆற்காட்டில் ஒரு இடம், ராணிப்பேட்டையில் ஒரு இடம் என 5 இடங்களில் சோதனை நடைபெற்றது.

இதுகுறித்து வருமான வரித் துறை அதிகாரிகள் கூறும்போது, “வரி ஏய்ப்பு புகாரின்பேரில், பரிதா மற்றும் கே.எச். குழுமங்கள் தொடர்புடைய 62 இடங்களில் சோதனை நடத்தினோம். இந்த குழுமங்கள் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட் டுள்ளன” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x