

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் எந்தவித விபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள எஸ்.யு.எம் தனியார் மருத்துவமனையில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர்; 120 பேர் படுகாயமடைந்தனர் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், துயரமும், வேதனையும் அடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மனித உயிர்களை காப்பாற்ற வேண்டிய மருத்துவமனையில், உயிர்களை பறிக்கும் வகையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது துரதிருஷ்டவசமானது. மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன் 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையில் இதே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட விபத்தில் 95 பேர் உயிரிழந்தனர். அந்த கொடிய விபத்திலிருந்து பாடம் கற்று போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய புவனேஸ்வர் எஸ்.யு.எம் தனியார் மருத்துவமனை தவறிவிட்டது.
மருத்துவமனையின் இந்த அலட்சியம் காரணமாக 24 அப்பாவிகள் உயிரிழந்திருக்கின்றனர். காயமடைந்த நோயாளிகளில் பலரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும். எஸ்.யு.எம் போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளில் எந்தவித விபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இத்தகைய மருத்துவமனைகளில் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை பாதுகாப்பு வசதிகள் குறித்த தணிக்கையை மத்திய, மாநில அரசுகள் கட்டாயமாக்க வேண்டும். இவ்விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ. 5 லட்சமும் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.
மேலும் மருத்துவமனை நிர்வாகத்திடமிருந்தும் இவர்களுக்கு சட்டப்படி இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். காயமடைந்த அனைவருக்கும் சிறப்பான மருத்துவம் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.