

மாம்பலம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பயணிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மின்சார ரயில் சேவை 45 நிமிடங்களுக்கு பாதிக்கப்பட்டது.
சென்னை கடற்கரையில் இருந்து தினமும் இரவு 8.30 மணிக்கு புறப்படும் திருமால்பூர் மின்சார ரயில் விரைவுப் பாதையாக (ஃபாஸ்ட் லைன்) இயக்கப்படுகிறது. இந்த மின்சார விரைவு ரயில் முக்கிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்லும்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த மின்சார விரைவு ரயில் அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் சாதாரண மின்சார ரயிலாக மாற்றப்பட்டுள்ளது. நேற்றும் இந்த ரயில் சாதாரண ரயிலாக இயக்கப்பட்டதால் கோபமடைந்த 500-க்கும் மேற்பட்ட பயணிகள் மாம்பலம் ரயில் நிலையத்தில் திடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மின்சார ரயிலை மீண்டும் விரைவு ரயிலாகவே இயக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் ரயில் பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். அதன்பின்னர் பயணிகள் கலைந்து சென்றனர். இந்த திடீர் மறியல் போராட்டம் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மார்க்கத்தில் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால், சுமார் 45 நிமிடங்களுக்கு மின்சார ரயில் சேவையும், விரைவு ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பிறகு, கடற்கரை - திருமால்பூர் இடையே மீண்டும் விரைவு மின்சார ரயில் இயக்கப்பட்டது.