வேலம்மாள் பள்ளியில் கலாம் பிறந்தநாள்: நடிகர் விவேக் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்

வேலம்மாள் பள்ளியில் கலாம் பிறந்தநாள்: நடிகர் விவேக் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்
Updated on
1 min read

ஆவடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாமின் பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விவேக் 25 ஆயிரம் மரக்கன்றுகளை வழங்கினார்.

ஆவடி வேலம்மாள் வித்யாலயா சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை ஒட்டி, உலக மாணவர்கள் தின விழா, பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் பங்கேற்று, அப்துல் கலாம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பள்ளித் தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி கவுரவித்தார். பின்னர் அவர் பேசியதாவது:

அப்துல் கலாம் வழங்கிய அறிவுரையின்படித்தான், நான் ‘கிரீன் கலாம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். மாணவர்கள் அனைவரும் மரம் நடுவதில் தங்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். மரங்களை நடுவதன் மூலம் நாம் வாழும் பகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுகிறது. அதன் மூலம் நமது உடல் நலனும் காக்கப்படுகிறது. நாம் மரக்கன்றுகளை நடுவதன் மூலம், அப்துல் கலாமின் கனவை நிறைவேற்றுகிறோம். மேலும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் சாய் பிரசன்னா அறக்கட்டளையுடன் இணைந்து பொதுமக்களுக்கு 25 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் சார்பில் லிம்கா சாதனை படைக்கும் விதமாக 1000 சதுர அடி பரப்பில் அப்துல் கலாமின் உருவப் படம் வரையப்பட்டது.

நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் பேரன் ஷேக் சலீம், சமூக செயல்பாட்டாளர் அப்துல் கனி, பள்ளியில் முதல்வர் செல்வநாயகி ஆகியோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in