உள்ளாட்சித் தேர்தல் ரத்தானாலும் செலவு தொடர்கிறது: வேட்புமனு செய்த திமுக, அதிமுகவினர் வேதனை

உள்ளாட்சித் தேர்தல் ரத்தானாலும் செலவு தொடர்கிறது: வேட்புமனு செய்த திமுக, அதிமுகவினர் வேதனை
Updated on
1 min read

உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுக வேட்பாளர்கள், மீண்டும் தாங்களே வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆதரவாளர்களை தக்க வைக்கவும், தொடர்ந்து பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதாலும் தேர்தல் செலவில் இருந்து தப்பிக்க முடியாமல் அவர்கள் புலம்பி வருகின்றனர்.

தற்போது பதவியில் இருக்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக் காலம், வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், அக் 17, 19-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது.

அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து அவர்களும் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர். திமுக, அதிமுக வேட்பாளர்கள் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினர்.

இந்த சூழலில், திமுக தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை திடீரென்று ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் மற்றும் சீட் பெறுவதற்காக லட்சக்கணக்கில் செலவிட்ட வேட்பாளர்கள் இன்னும் தேர்தல் ரத்து அறிவிப்பு அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர்.

டிசம்பர் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைகள் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வரும் 18-ம் தேதி வர இருக்கிறது. அதனால், மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் தாங்களே போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் காத்திருக்கின்றனர்.

அதனால், உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் திமுக, அதிமுகவில் வேட்பாளராக அறிவி க்கப்பட்டவர்கள் சத்தமில்லாமல் தங்கள் வார்டுகளில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திமுகவை பொறுத்தவரை ஏற்கெ னவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் மாற்றம் இருக்காது என அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் உறுதியளித்துள்ளதால் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தேர்தல் களத்தில் பின்வாங்காமல் வார்டுகளில் ஆதரவு திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர் ஜெய லலிதா சிகிச்சையில் இருப்பதால் அதிமுகவில் அறிவிக்கப்பட்ட பட்டியலிலும் மாற்றம் இருக்காது என கூறப்படுகிறது. அதனால், திமுகவினருக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதிமுகவில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களும் நேரடியாக பிரச்சாரப் பணியில் ஈடுபடாவிட்டாலும் சத்தமில்லாமல் ஆதரவு திரட்டும் பணியிலும், ஆதரவாளர்களைத் தக்க வைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

அதனால், தேர்தல் ரத்து செய்யப்பட்டாலும் தொடர்ந்து இந்த இரு கட்சிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தொடர்ந்து கட்சியினருக்கும், ஆதரவாளர்களுக்கும் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தற்போது தீபாவளி பண்டிகை நெருங்குவதால் குறைந்தபட்சம் ஆதரவாளர் களுக்காவது தீபாவளி ‘கவனிப்பு’ செய்ய வேண்டியது இருப்பதால் செலவுகளை சமாளிக்க முடியாமலும் உள்ளாட்சித் தேர்தல் நடக்குமா, நடக்காதா என்பது தெரியாமலும் வேட்புமனு தாக்கல் செய்த திமுக, அதிமுகவினர் புலம்பி வருவதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in