Last Updated : 23 Aug, 2022 05:57 PM

 

Published : 23 Aug 2022 05:57 PM
Last Updated : 23 Aug 2022 05:57 PM

‘குமரி திமுக கோஷ்டி மோதல் விளைவு’ - அரசு மருத்துவக் கல்லூரி உணவக சீல் வைப்புக்கு இடைக்கால தடை

உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை

மதுரை: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த உணவகத்துக்கு சீல் வைத்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

குமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ''நாகர்கோவில் ஆசாரிப்பள்ளத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உரிய அனுமதி பெற்ற 2004 முதல் உணவகம் நடத்தி வருகிறேன். நான் முன்பு அதிமுகவில் இருந்தேன். பின்னர் அதிமுக உள்ளூர் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்போதைய திமுக மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ்ராஜன் முன்னிலையில் திமுகவில் சேர்ந்தேன்.

இந்நிலையில், உள்கட்சி பிரச்சினையால் சுரேஷ்ராஜன் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, நாகர்கோவில் நகரச் செயலாளராக இருந்த மகேஷ் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் மகேஷ் நாகர்கோவில் மேயராகவும் தேர்வானார்.

என் தொழிலை முடக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சுரேஷ்ராஜனுக்கு எதிர் அணியை சேர்ந்த 4 பேர் ஆக.4-ல் உணவகத்துக்கு வந்து சாப்பிட்டு விட்டு, என் உணவகத்தில் சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதையடுத்து என் உணவகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசு மருத்துவமனை டீன், மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் அனுப்பினார்.

மறுநாள் மாநகராட்சி அதிகாரிகள் உணவகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சமைத்து வைத்திருந்த உணவுகளையும், உணவு தயாரிக்க வைத்திருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து உணவகத்துக்கு சீல் வைத்தனர். உணவகத்துக்கு சீல் வைப்பதற்கான உத்தரவை அன்று மாலையில் தான் வழங்கினர். விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல் அரசியல் அழுத்தம் காரணமாக உணவகத்துக்கு அவசரம் அவசரமாக சீல் வைத்துள்ளனர். இதனால் சீலை அகற்றக் கோரி மாநகராட்சி ஆணையருக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, உணவகத்துக்கு சீல் வைப்பது தொடர்பாக நகர் நல அலுவலர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, தொடர்ந்து உணவகம் நடத்த அனுமதி வழங்கியும், அதுவரை அந்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.பி.கிருஷ்ணதாஸ் வாதிடுகையில், ''அரசியல் அழுத்தம் காரணமாக உணவகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நகர் நல அலுவலரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்றார்.

இதையடுத்து மனுதாரரின் உணவகத்தை சீல் வைப்பது தொடர்பாக நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x