கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனு

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் ஜாமீன் கோரி மனு

Published on

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்துவந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் மரணமடைந்தார். இதுதொடர்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்தப் புகாரின் பேரில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா, கணித ஆசிரியை கிருத்திகா ஆகிய 5 பேரை கைது செய்த போலீஸார், சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் 5 பேரின் ஜாமீன் கோரி ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இந்த மனுக்களை தள்ளுபடி செய்து கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவிதமான அடிப்படை ஆதாரங்களும் இல்லை. எனவே தங்களுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த மனுக்கள் நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in