Published : 23 Aug 2022 12:44 PM
Last Updated : 23 Aug 2022 12:44 PM

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியை சீரமைக்க கோரிய வழக்கு: 10 நாட்களில் முடிவெடுக்க ஆட்சியருக்கு உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவியின் மரணத்தையடுத்து சூறையாடப்பட்ட பள்ளியை சீரமைக்கவும், பள்ளியை மீண்டும் திறக்கவும் அனுமதி கோரி அளிக்கப்பட்ட மனு மீது 10 நாட்களுக்குள் முடிவெடுக்க மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஜூலை 17-ம் தேதி அப்பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர்.

இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு யாரும் நுழையக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளியை சீரமைக்க அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரி பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், " இந்த கலவரத்தின் காரணமாக பள்ளியில் 25 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரி செய்ய வளாகத்துக்குள் யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. 3,500 மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால்
நேரடி வகுப்புகளை தொடங்க பெற்றோர் வற்புறுத்தி வருகின்றனர்.

வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவற்றை சரி செய்ய அனுமதிக்காததால் கோடிக்கணக்கான ரூபாய்க்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.

இதுகுறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை வளாகத்தில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பள்ளி வளாகத்துக்குள் நுழைய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.

பள்ளியை மீண்டும் திறக்க அனுமதி கோரிய விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட வேண்டும்" என்றும் மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "அரசு ஏற்ப்பாட்டின் பேரில் ஏற்கெனவே ஒன்று முதல் 8-ம் வகுப்புகளுக்கு ஆன்லைன் முறையிலும், ஒன்பது முதல் 12-ம் வகுப்புகளுக்கு அருகில் உள்ள பள்ளியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்தார்.

பின்னர் வாதிட்ட அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "இந்த விவகரர்த்தில் பள்ளி தாளாளரின் மகன் சம்பந்தப்பட்டு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. எனவே அது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் தடயம் சேகரிக்க வேண்டி இருப்பதால் பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை. ஒருவேளை அனுமதி வழங்கினால் முதலில், பள்ளியை சீரமைக்கும் பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். சீரமைப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்த பின்னரே பள்ளி மீண்டும் செயல்பட அனுமதி வழங்க முடியும்" எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் "பள்ளி நிர்வாகம் அளித்த மனு குறித்து மாவட்ட ஆட்சியர் பத்து நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x