மீனவர்கள் கைது | இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்

மீனவர்கள் கைது | இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ்
Updated on
1 min read

சென்னை: "இலங்கை சிறையில் வாடும் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 9 பேரையும், இப்போது கைது செய்யப்பட்டுள்ள அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன் மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேர், வங்கக்கடலில் கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, சிங்களப் படையினரால் சட்டவிரோதமாக துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

தமிழக மீனவர்களை சிங்களப் படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள ஆறாவது கைது இதுவாகும். இதுவரை மொத்தம் 48 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்களின் 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சிங்களக் கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் சட்டவிரோதமானவை. இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு தமிழகத்திலிருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டும் கூட, அதை சிங்கள அரசு மதிக்கவில்லை. சிங்கள அரசின் அகங்காரத்திற்கும், அத்துமீறலுக்கும் முடிவு கட்டப்பட வேண்டும்.

கடந்த 6-ஆம் தேதி கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் வாடும் கீச்சாங்குப்பம் மீனவர்கள் 9 பேரையும், இப்போது கைது செய்யப்பட்டுள்ள அக்கரைப்பேட்டை மீனவர்கள் 10 பேரையும் அவர்களின் படகுகளுடன் மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in