நகைகள், சொத்து இருப்பு விவரங்கள் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் அதிகாரிகள் ஆய்வு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வந்த  இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆய்வு மேற்கொள்வதற்காக நேற்று வந்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழுவினர்.
Updated on
1 min read

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நகைகள் மற்றும் சொத்து விவரங்கள், கோயிலின் கணக்கு விவரங்களை அறநிலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சில மாதங்களுக்கு முன் இக்கோயிலில் உள்ள கனகசபையில் (சிற்றம்பல மேடையில்) ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்ததால், நடராஜர் கோயில் கனகசபையில் ஏறி, பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

தொடர்ந்து, நடராஜர் கோயில் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று அறநிலையத் துறை அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து, நேரடியாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் சுமார் 5 ஆயிரம் புகார்கள் அறநிலையத் துறைக்கு அனுப்பப்பட்டன.

பின்னர், கோயிலின் சொத்து விவரக் கணக்குகளை அறிய ஆய்வுக்கு வருவதாக கோயில் பொது தீட்சிதர்களுக்கு, அறநிலையத் துறை அதிகாரிகள் கடிதம் அனுப்பினர். இதற்கு முதலில் எதிர்ப்புத் தெரிவித்த கோயில் தீட்சிதர்கள், பின்னர் ஆய்வுக்கு வரலாம் என கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில், அறநிலையத் துறை துணை ஆணையர்கள் திருவண்ணாமலை குமரேசன், கடலூர் ஜோதி, விழுப்புரம் சிவலிங்கம், நகை மதிப்பீட்டு வல்லுநர்கள் தர்மராஜன், குமார், குருமூர்த்தி ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வந்தனர். தீட்சிதர்கள் அவர்களை வரவேற்று, அழைத்துச் சென்றனர். பின்னர், கோயிலில் உள்ள நகைகள் மற்றும் கணக்கு விவரங்களை இக்குழுவினர் ஆய்வு செய்தனர்.

மாலை 5 மணியளவில் ஆய்வைமுடித்துவிட்டு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறும்போது, “2005-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2006 மார்ச் மாதம் வரையான கோயிலின் காணிக்கை இனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. தொடர்ந்து 4 நாட்களுக்கு ஆய்வு நடைபெறும்” என்றனர்.

நடராஜர் கோயில் பொது தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறும்போது, “எங்களிடம் தவறுஇல்லை என்பதால்தான் ஆய்வுக்குஅனுமதித்துள்ளோம். கோயில் நகைகளைப் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள்பரப்பப்படுகின்றன. வருங்காலங்களில் கோயில் தரப்பில் இருந்துஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் ஆய்வு செய்து, அதன் அறிக்கையை வெளியிடுவோம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in