20 ஆண்டுகளுக்குப் பின்னர் நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை

20 ஆண்டுகளுக்குப் பின்னர் நெல் உற்பத்தியில் தமிழகம் சாதனை
Updated on
1 min read

சென்னை: நெல் உற்பத்தி மற்றும் சாகுபடிப் பரப்பில் கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகம் சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, பயிர் சாகுபடிப் பரப்பு ஆண்டுதோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை அறிவித்து,விவசாயிகளுக்கு உதவி வருகிறது. குறிப்பிட்ட காலத்தில் பயிர்க்கடன், காப்பீட்டு வசதி, உரம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வழக்கமாக ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும் சூழலில், இந்த ஆண்டு முன்னதாகவே முதல்வர் ஸ்டாலின் அணையைத் திறந்து வைத்தார். மேலும், போதிய மழையும் பெய்துவருவதால், கடந்த 2 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதனால், சாகுபடி பரப்பும், உற்பத்தியும் அதிகரித்துள்ளது. தமிழக அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 20 ஆண்டுகளுக்குப் பின்னர் சாகுபடிப் பரப்பும், அதைத் தொடர்ந்து உற்பத்தியும் பெருமளவில் உயர்ந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2000-01-ல் சாகுபடிப் பரப்பு அதிகபட்சமாக 20.80 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.11 லட்சம் டன்னாகவும் இருந்தது. கடந்த 2021-22-ல் சாகுபடிப் பரப்பு 22.05 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.22 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.

கடந்த 2020-21ல் சாகுபடிப் பரப்பு 20.36 லட்சம் ஹெக்டேராகவும், உற்பத்தி 1.04 லட்சம் டன்னாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.உரிய காலத்துக்கு முன்னதாகவே தண்ணீர் திறப்பு, ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டது உள்ளிட்ட காரணங்களே இந்த சாதனைக்குக் காரணம் என்று வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in