

மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெறுகிறது. மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்ட மக்கள் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 31-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு குடியிருப்பு பகுதிகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படும். இச்சிலைகளுக்கு 3 முதல் 10 நாட்கள் வரை பூஜை செய்த பிறகு ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து எளிமையாக சதுர்த்தி விழாவை கொண்டாடினர்.
கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட சூழலில் தற்போது நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை உற்சாகமாகக் கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது இறுதிக்கட்டமாக சிலைகளுக்கு வண்ணம் பூசம் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வந்த தொழிலாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் தங்கியிருந்து விநாயகர்சிலைகளை தயாரித்து வருகின்றனர். இவர்களிடம் இருந்து மதுரை மட்டுமின்றி தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரும் மக்களும் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.
இது தொடர்பாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாகப் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால் இந்த ஆண்டு புதிய வடிவங்களில் சிலைகளை தயார் செய்யவில்லை. பெரும்பாலும் வழக்கமான வடிவத்திலேயே தயார் செய்கிறோம். எனினும், வித்தியாசமான வடிவில் சிலை செய்து தர ஆர்டர் கொடுப்போருக்கு, அவர்கள் விரும்பியதுபோல் செய்து தருகிறோம்.
ஒரு அடி முதல் 15 அடி வரையிலான சிலைகளை தற்போது விற்பனை செய்கிறோம். சிலைகளின் அளவு, வடிவமைப்புக்கு ஏற்ப ரூ.50 முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்கிறோம். மயில், சிங்கம், மான் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலைகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.