

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடர்பான கைபேசி செயலி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இதர அரசு துறைகளுடன் இணைந்து, ஆய்வுக் கூட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை நடத்தினார். அதில், விழிப்புணர்வு தொடர்பான கைபேசி ஆண்ட்ராய்டு செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இதை கூகுள் பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இதில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்கள் வளர ஏதுவான இடங்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. குறும்படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள வேண்டிய 104,108 மற்றும் பொதுசுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டறை தொலைபேசி எண்களும் அளிக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தில், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை ஆணையர் மோகன் பியாரே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.