

மதுராந்தகம் அருகே கோலம்பாக்கம் ஊராட்சியில் இயங்கி வரும் ஐஓசி நிறுவனம் தனது உற்பத்தி திறனை 1 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வரும் 26-ம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் கோலம்பாக்கம் கிராமத்தில், எல்பிஜி எரிவாயு சேமிப்பு மற்றும் சிலிண்டரில் நிரப்பும் ஆலை கடந்த 2003-ல் தொடங்கப்பட்டது. இந்த ஆலை சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் எல்பிஜி சிலிண்டர் தேவையைப் பூர்த்தி செய்கிறது.
சென்னை அத்திப்பட்டு கிராமத்திலுள்ள ஐபிபிஎல் நிறுவனத்திடம் இருந்து லாரிகள் மூலமாக எல்பிஜியை பெற்று, கோலம்பாக்கத்திலுள்ள ஆலையில் 600 டன் கொள்ளளவு கொண்ட 3 கிடங்குகளில் சேமித்து, பிறகு சிலிண்டரில் நிரப்பி விநியோகம் செய்யப்படுகிறது. மேற்கூறிய மாவட்டங்களில் பயனாளிகளின் பெருக்கத்தை ஐஓசி நிறுவனம் சமாளிக்க வேண்டியுள்ளது. மேலும், மத்திய அரசின் கிராமப்புற பெண்களுக்கு காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டியுள்ளது.
அதற்காக, ஆண்டுக்கு 44 ஆயிரம் டன் உற்பத்தித் திறன் கொண்ட இந்த ஆலை, ஆண்டுக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் டன்னாக உற்பத்தித் திறனை உயர்த்த உத்தேசித்துள்ளது. அதற்கு புதிதாக ஒரு சிலிண்டர் நிரப்பும் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டியுள்ளது. இதன் திட்ட மதிப்பு ரூ.5 கோடியே 20 லட்சம் ஆகும். இந்த திட்ட விரிவாக்கத்துக்காக, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிப்பாணை 2006-ன்படி மதிப்பீடு செய்து, இசைவு ஆணை கோரி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கருத்துரு அனுப்பியுள்ளது.
அதில் ஆலையைச் சுற்றி பாதுகாக்கப்பட வேண்டிய தாவரங்களோ, விலங்குகளோ இல்லை என்றும், ஆலையினுள் 56 ஆயிரத்து 118 சதுர மீட்டர் பரப்பளவுக்கு (ஆலையின் மொத்த பரப்பில் 33 சதவீதம்) பசுமை போர்வை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த திட்ட விரிவாக்கத்துக்கு இசைவு ஆணை வழங்குவது தொடர்பாக வரும் 26-ம் தேதி பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உமயகுஞ்சரத்திடம் கேட்டபோது, ‘ஐஓசி நிறுவனம், இப்போதுள்ள கட்டமைப்புக்கு ஏற்கெனவே இசைவு ஆணை பெற்றுள்ளது. விரிவாக்கம் செய்வதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு செய்து இசைவு ஆணை வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளது. அதற்காக வரும் 26-ம் தேதி காலை 11 மணிக்கு ஐஓசி நிறுவனத்தின் அருகில் உள்ள பாலாஜி பவன் ஹோட்டல் வளாகத்தில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும். இதில் பொதுமக்கள பங்கேற்று இத்திட்ட விரிவாக்கம் தொடர்பாக தங்கள் ஆட்சேபணைகளைத் தெரிவிக்கலாம்’ என்று அவர் கூறினார்.