மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணத் தொகை: தமிழக அரசு உடனே வழங்க மீனவர் சங்கம் கோரிக்கை

மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணத் தொகை: தமிழக அரசு உடனே வழங்க மீனவர் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

கடந்த ஆண்டு வழங்கப்பட வேண்டிய மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவர் கு.பாரதி தமிழக முதலமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச் சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மீன்பிடிப்பு குறைந்த அக்டோ பர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீனவ குடும்பங்களுக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும், ஒரு குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழகத்தில் கடலில் மீன் பிடிக்கும் லட்சக்கணக்கான மீனவ குடும்பங்கள் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த 2015-16-ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1 லட்சத்து 59 ஆயிரத்து 274 மீனவ குடும்பங்களுக்கு சுமார் ரூ.63 கோடியே 70 லட்சம் நிவாரண உதவித் தொகையாக தமிழக அரசு வழங்கியுள்ளது. மேலும், நடப்பாண்டில் ரூபாய் ஆயிரம் உயர்த்தி 5,000 ரூபாயாக வழங்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015-16-ம் ஆண்டில் மீன்பிடிப்பு குறைந்த கால சிறப்பு நிவாரண உதவித் தொகையை வழங்க தமிழகத்தில் முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தனி உணவுப் பங்கீடு அட்டை வைத்துள்ள மீனவ குடும்பங்களில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களால் ஆய்வு செய்யப்பட்டும் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்களுக்கு இன்னும் இந்த சிறப்பு நிவாரண உதவித்தொகை வழங்கப்படாமல் உள்ளது.

கடந்த ஆண்டுக்கான மீன் பிடிப்பு குறைந்த கால நிவா ரணத் தொகை இன்னும் பெறப் படாததால் இந்த ஆண்டுக்கான நிவாரண உதவித் தொகையையும் இந்த ஆயிரக்கணக்கான மீனவ குடும்பங்கள் பெற முடியாத நிலை உள்ளது.

எனவே, தமிழக முதல்வர் கடந்த ஆண்டுக்கான மீன்பிடிப்பு குறைந்த கால நிவாரணத் தொகையை பெறாத, தகுதியுள்ள மீனவ குடும்பங்களுக்கு தேவை யான நிதியை ஒதுக்கி, நிவாரணத் தொகையை உடனே வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கடந்த ஆண்டில் நிவாரணத் தொகை பெறாத மீனவ குடும்பங்களுக்கு நடப் பாண்டுக்கான விண்ணப்பங்களை பெற்று இந்த ஆண்டுக்கான சிறப்பு நிவாரண உதவித் தொகையை வழங்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in