

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான ஃபைபர் படகில், கிருஷ்ணமூர்த்தி,
அதே பகுதியைச் சேர்ந்த பாலாஜி(36), முருகானந்தம்(40), வேலுச்சாமி(55), செந்தில்(38), கீழகாசாக்குடிமேட்டைச் சேர்ந்த ராமசாமி(52), ராஜ்குமார்(30) ஆகிய 7 பேர் ஆக.18-ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
இவர்கள் 20-ம் தேதி கரை திரும்பியிருக்க வேண்டும். ஆனால், நேற்று மாலை வரை கரை திரும்பவில்லை. மேலும், அவர்களின் நிலை குறித்தும் தகவல் தெரியவில்லை.
இதையடுத்து, காரைக்கால் கடலோர காவல் நிலையத்தில் காரைக்கால் மேடு மீனவப் பஞ்சாயத்தார் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் மர்த்தினி வழக்குப் பதிவு செய்து, மீனவர்களின் நிலை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகவும், அதன் பிறகு அவர்களின் செல்போன் இணைப்பு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.