

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காமாட்சியம்மன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி (56). இவர், நெல்லூர்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலைக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரமிளா இவாஞ்சலின் கொடுத்த மன உளைச்சல் காரணம் என நாகேஸ்வரியின் மகன் குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், திங்கட்கிழமை யான நேற்று பள்ளி வழக்கம்போல் திறக்கப்பட்டது. அப்போது, பள்ளி வளாகத்தில் மறைந்த ஆசிரியைக்கு சக ஆசிரியைகள், மாணவிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 10-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் கருப்பு பட்டை அணிந்து பள்ளி வளாகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளி மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலசப்பு ஏற்பட்டது. இந்த தகவலையடுத்து குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் தனஞ்செயன், வட்டாட்சியர் விஜயகுமார், குடியாத்தம் நகராட்சி மன்றத் தலைவர் செளந்தரராஜன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தலைமை ஆசிரியை மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையேற்று, ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கிடையில், பள்ளியின் தலைமை ஆசிரியை பிரமிளா இவாஞ்சலின் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தும் மாற்று ஏற்பாடாக பள்ளியின் மூத்த இயற்பியல் ஆசிரியை லட்சுமி, நிதி அதிகாரத்துடன் கூடிய பொறுப்பு தலைமை ஆசிரியையாக நியமனம் செய்தும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உத்தரவிட்டுள்ளார்.