

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனை திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திங்களன்று அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும் நிபுணர்கள் குழுவில் உள்ள பிற மருத்துவர்களும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தேவையான சுவாச உதவி, நோய் எதிர்ப்பு ஆன்ட்டி பயாடிக் சிகிச்சை, ஊட்டச்சத்து மற்றும் பிற ஆதரவுச் சிகிச்சைகள் உட்பட பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சை நிபுணர், பேராசிரியர் டாக்டர் ஜி.கில்னானி நேற்றும் இன்றும் (9,10 தேதிகள்) முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதித்தார்.
பிறகு அப்பல்லோ மருத்துவமனை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது அப்பல்லோ வழங்கி வரும் சிகிச்சை முறைகளுக்கு கில்னானி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரள முதல்வர், ஆளுநர், கிரண் பேடி ஆகியோர் அப்பல்லோ வருகை:
இந்நிலையில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அம்மாநில ஆளுநர் பி.சதாசிவம் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டியைச் சந்தித்துப் பேசினர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரள ஆளுநர் சதாசிவம், “நாங்கள் பிரதாப் ரெட்டியையும் முதல்வருக்கு சிகிச்சை அளிக்கும் மற்ற மருத்துவர்களையும் சந்தித்துப் பேசினோம். சிறிது நாட்களில் முதல்வர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். அவர் மீண்டும் நிர்வாகத்தை கவனிக்க முடியும். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்.
பினரயி விஜயன் கூறும்போது, “கேரள மக்களின் நல்லாசிகளை தெரிவிக்க இங்கு வந்தேன்” என்றார்.
முன்னதாக புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி அப்பல்லோ வந்தார். அவர் கூறும் போது, “அம்மா நல்ல முறையில் கவனிக்கப்பட்டு வருகிறார். அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து உடல் நிலை முன்னேற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்” என்றார்.