

தாம்பரம் அடுத்த அகரம் தென்குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் ரேணுகா (37). புனிததோமையார் மலை ஒன்றிய திமுக மகளிர் அணி துணைத் அமைப்பாளராக உள்ளார். அப்பகுதியில் மகளிர் சுயஉதவிக் குழுவும் நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தனது இருசக்கர வாகனத்தில் மூன்றாவது படிக்கும் தனது மகளை பள்ளிப் பேருந்தில் ஏற்றிவிட்டு வீடு திரும்பினார்.
அகரம் தென் பேருந்து நிறுத்தம் அருகே வரும்போது அங்கு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் ரேணுகாவிடம் முகவரி கேட்பது போல அவரை நிறுத்தினர். பின்னர் அவரை திடீரென அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் நிலைகுலைந்த அவர் அலறினார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார், இதற்கு அரசியல் காரணம் ஏதும் உள்ளதா, முன்விரோத பகையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.