Published : 23 Aug 2022 04:23 AM
Last Updated : 23 Aug 2022 04:23 AM

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் - சுகாதாரத் துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. சுகாதாரம், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதை கடந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால், 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக 75 நாட்களுக்கு செலுத்தும் பணி கடந்த ஜூலை 15-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

மேலும், தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்தும் வகையில், சிறப்பு மெகாமுகாம்கள் நடைபெற்று வருகின்றன. இந்த முகாம்கள் மூலம் மட்டும் 5.10 கோடி டோஸ் தடுப்பூசி, முதல், 2-வது மற்றும் பூஸ்டர் தவணையாக செலுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96.20 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 90.05 சதவீதம் பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 17 வயதுடைய சிறார்களில் 30 லட்சத்து 49,472 (91.14 சதவீதம்) பேருக்கு முதல் தவணையும், 25 லட்சத்து 76,518 (77சதவீதம்) பேருக்கு 2-ம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

பூஸ்டர் தவணை தடுப்பூசி 60 லட்சத்து 70,499 (14.96 சதவீதம்) பேருக்கு போடப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுடைய சிறார்களில் 19 லட்சத்து 69,450 (92,85 சதவீதம்) பேருக்கு முதல் தவணையும், 14 லட்சத்து 65,602 (69.10 சதவீதம்) பேருக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “75-வது சுதந்திர தினத்தையொட்டி 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக 75 நாட்களுக்கு செலுத்தும் பணி ஜூலை 15-ம் தேதி தொடங்கியது. விரைவாக அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசியை இலவசமாக அரசு மையங்களில் செலுத்திக்கொள்ளலாம். 75 நாட்களுக்குப்பின், பூஸ்டர் தவணை தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்திதான் போட முடியும்” என்றார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x