Published : 23 Aug 2022 04:02 AM
Last Updated : 23 Aug 2022 04:02 AM
புதுச்சேரி: அரசின் மாதாந்திர உதவித்தொகை எதுவும் பெறாத ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என்று புதுச்சேரி பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் ரூ.10,696 கோடிக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். அதில் புதிதாக வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
* அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
* அரசின் எந்த மாதாந்திர உதவித்தொகையும் பெறாத, வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள 21 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்கும் ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும்.
* வறுமைக்கோட்டுக்குகீழ் உள்ள குடும்பங் களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும், ‘ஆயுஷ்மான் பாரத் - பிரதான் மந்திரி ஜன ஆரோக்கிய யோஜனா’ என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டம், வறுமைக்கோட்டுக்குமேல் உள்ள, தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
* நிலுவையில் உள்ள ஓய்வூதிய விண்ணப்பங் கள் அனைத்துக்கும் வரும் மாதங்களில் ஓய்வூதியம் வழங்கப்படும்.
* அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.
* மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர பயணப்படி ரூ.100-ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகள், மாற்றுத் திறனாளி அல்லாதவரை திருமணம் செய்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளி, மற்றொரு மாற்றுத் திறனாளியை திருமணம் செய்தால் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும்.
* தொடர் நோயால் பாதிக்கப்பட்ட, 18 வயது பூர்த்தியடைந்த ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு தற்போது மருத்துவ செலவுக்காக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச வயது வரம்பை நீக்கி, அனைத்து வயதினருக்கும் நிதியுதவி வழங்கப்படும்.
* புதுச்சேரி அரசு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும்.
* காரைக்கால் துறைமுகம் - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே பயணிகள், சரக்கு கப்பல் போக்குவரத்து நடப்பாண்டில் தொடங்கப்படும்.
* ‘சாகர்மாலா’ திட்டத்தின்கீழ் சென்னை துறைமுக பொறுப்புக் கழகத்துடன் இணைந்து புதுவை துறைமுகத்தில் சரக்குகள் கையாளும் பணிகள் இந்த ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும். இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT