Published : 22 Aug 2022 12:43 PM
Last Updated : 22 Aug 2022 12:43 PM

காவேரி கூக்குரல் இயக்கத்தின் 1 லட்சம் மரங்கள் நடும் திட்டம்: தேவராயபுரத்தில் 16,500 மரக்கன்றுகள் நடவு

கோவை: காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் தொண்டாமுத்தூர் ரோட்டரி சங்கம் சார்பில் "பசுமை தொண்டாமுத்தூர்" திட்டம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 17,000 மரங்கள் நடவு செய்தனர்.

இது குறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட தகவல்: பசுமை தொண்டாமுத்தூர் திட்டம் கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினம் சுமார் 17,000 மரங்கள் நடவு செய்தனர். அதன் இரண்டாம் கட்ட நிகழ்வாக 20 ஆகஸ்ட் 2022 தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 16,500 மரங்கள் நடப்பட்டன. 1 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு, மக்களின் ஆர்வமான பங்களிப்பினால் இது 2 லட்சம் மரங்களாக தொடர்கிறது என ஒருங்கிணைப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இத்திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள 60 கிராமங்களில் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக தேக்கு, செம்மரம், மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற உயர் மதிப்புமிக்க டிம்பர் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், "மரம் நடுவதன் மூலம் நாம் 2 பெரும் பலன்களை பெற முடியும். முதலாவதாக, மரங்கள் வளர்ப்பதன் மூலம் மண்ணின் வளம் பெருகும். மண்ணில் சத்து இருந்தால் தான் அதில் விளையும் பொருட்களில் சத்து இருக்கும். சத்தான உணவை உண்டால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

இரண்டாவது, டிம்பர் மரக்கன்றுகளை வளர்ப்பதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும். ஒற்றை பயிர் விவசாயத்திற்கு பதிலாக மரம் சார்ந்த பல பயிர் விவசாயம் செய்தால் பயிர்களில் இருந்து தொடர் வருமானமும், சில ஆண்டுகளுக்கு பிறகு மரங்களில் இருந்து மொத்த வருமானமும் கிடைக்கும்.

மூன்றாவதாக, மரங்கள் வளர்ப்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு மிக மிக அவசியம். பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள அதிகளவில் மரங்கள் நட வேண்டும். நான்காவதாக, நிலத்தடி நீர் மட்டத்தை அதிகரிக்கவும், நதிகளுக்கு புத்துயிரூட்டவும் மரங்கள் வளர்க்க வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சிக்கு தேவராயபுரம் பஞ்சாயத்து தலைவர் தனமணி மூர்த்தி தலைமை தாங்கினார். மேலும், அப்பகுதி விவசாயிகள், பேரூராட்சி பிரதிநிதிகள், கவுன்சிலர்கள், மாணவ மாணவிகள் என பல தரப்பினரும் பங்கேற்றனர். காவேரி கூக்குரல் இயக்கத்தின் பணியாளர்கள் ஒவ்வொரு கிராமங்களிலும் விவசாயிகளை நேரில் சந்தித்து நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைக்க உள்ளனர்.

தொண்டாமுத்தூர் பகுதி விவசாயிகள் டிம்பர் மரக்கன்றுகளை இலவசமாக பெற்று கொள்ள 93429 76519, 95004 77437 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x