Published : 22 Aug 2022 05:52 AM
Last Updated : 22 Aug 2022 05:52 AM

பொருளாதார நெருக்கடியால் பாதிப்பு: இலங்கை தமிழர்கள் 8 பேர் தனுஷ்கோடி வருகை

மூன்றாம் தீடையிலிருந்து ஹோவர் கிராஃப்ட் கப்பல் மூலம் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு அழைத்து வரப்பட்ட இலங்கை தமிழர்களின் குடும்பங்கள்.படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து 4 குழந்தைகள் உட்பட 8 தமிழர்கள் படகு மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அங்குள்ள தமிழர்கள் அகதிகளாக தமிழகத்துக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கை கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரகுமார் (36), அவரது மனைவி டெல்சித்ரா (36), மகன் வெனுஷன் (7), இரண்டு மாதகுழந்தை பிரவீன்ஷா. யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த கிருபாகரன் (30), அவரது மனைவி சாந்தி (30), குழந்தைகள் தீபிகா (9), சசிகலா (4) ஆகிய 8 பேரும் தலைமன்னாரில் இருந்து பைபர் படகு மூலம் தனுஷ்கோடி அருகே உள்ள மூன்றாவது தீடையில் நேற்று முன்தினம் மாலை வந்திறங்கினர்.

இதுபற்றி தகவலறிந்தும் கடலோர காவல் படையினர்,கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் உடனடியாக அங்கு செல்ல முடியவில்லை.

நேற்று காலை இயல்புநிலை திரும்பியதையடுத்து ஹோவர் கிராஃப்ட் ரோந்து கப்பல் மூலம் மூன்றாவது தீடை பகுதிக்குச் சென்று 8 பேரையும் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பிறகு 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இலங்கையில் இருந்து அடைக்கலம் தேடி தமிழகம் வருவோரை அகதியாக அங்கீகரிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.

ஏற்கெனவே உள்நாட்டுப் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் 1 லட்சத்து 2 ஆயிரம் பேர், 29 மாவட்டங்களில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களிலும், காவல் நிலையங்களில் பதிவு செய்துவிட்டு வெளியிலும் தங்கியுள்ளனர்.

முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை, வீடு, மின்சாரம், கல்வி உதவி, குடும்பத்துக்கு மாதம் 20 கிலோ இலவச அரிசி, ரேஷன் கடைகளில் மானிய விலையில் அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவோருக்கு இந்த சலுகைகள் கிடைக்கவில்லை. இவர்களுக்கு அகதிகள் என்ற அங்கீகாரம் கிடைத்தால்தான் உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும். இது தொடர்பாக மத்திய அரசின் முடிவுக்காக மாநில அரசு காத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x