அரசுத் துறைகள் பட்ஜெட்டுக்குள் எரிபொருள் வாங்க வேண்டும்: நிதித் துறைச் செயலர் முருகானந்தம் அறிவுறுத்தல்
சென்னை: நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், அனைத்து துறைகளின் செயலர்கள், தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் இதர பகுதிகளில் சில அரசுத் துறைகள் சார்பில், அரசு வாகனங்களுக்கான பெட்ரோல் நிலையங்கள் நடத்தப்படுகின்றன.
அவை நேரடியாக இந்தியன் ஆயில் மற்றும் இதர நிறுவனங்களிடம் இருந்து பெட்ரோல், டீசலை மொத்த விலைஅடிப்படையிலும், சில நேரங்களில் சில்லறை விற்பனை நிலையங்களில் இருந்தும் கொள்முதல் செய்கின்றன.
எனினும், பெட்ரோல், டீசல் கொள்முதல் தொடர்பாக இதுவரை எந்த பிரத்யேக வழிகாட்டுதலும் இல்லை. அண்மையில், மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம், சில்லறை விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
எனவே, பல பொதுத் துறைநிறுவனங்கள், பெட்ரோல் டீசலை சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்க முடிவெடுத்துள்ளன. பெட்ரோல், டீசல் விலை நிரந்தரமாக இருக்காது. ஏற்ற, இறக்கமாகத்தான் இருக்கும்.
கச்சா எண்ணெய் விலை, தேவை மற்றும் விநியோகம், வரி விதிப்பு, டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை பெட்ரோல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை விதிகளின்படி, ஓர் அரசு ஊழியர், தனது சொந்த செலவினங்களுக்கு எவ்வாறு நிதியைப் பொறுப்புடனும், விவேகத்துடனும் செலவழிப்பாரோ, அதே விவேகம், பொறுப்புடன் தனது கட்டுப்பாட்டில் உள்ள பொது நிதியையும் பயன்படுத்த வேண்டும்.
எனவே, அரசுத் துறைகள் விவேகத்துடன் எரிபொருளை வாங்க வேண்டும் என்று துறைகளின் தலைவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், எந்த முறையில் வாங்கினால் விலை குறைவாகவும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ள தொகைக்குள் வரும் என்பதையும் அறிந்து, அதன்படி பெட்ரோல், டீசலை வாங்க வேண்டும்.
