நீதிமன்றம் உத்தரவிட்ட காலஅவகாசம் முடிந்தது: தொண்டர்களின்றி வெறிச்சோடிய அதிமுக அலுவலகம்

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார். படம்: ம.பிரபு
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார். படம்: ம.பிரபு
Updated on
1 min read

சென்னை: சென்னை வானகரத்தில் கடந்தஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதில்,இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி.பிரபாகர்ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்றார்.

அங்கு பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டு, மோதலில் ஈடுபட்டவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பின்னர், வருவாய்த் துறை மூலம் அந்த அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பினர் தனித்தனியே சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதன் மீதான தீர்ப்பு கடந்த ஜூலை 20-ம் தேதி வழங்கப்பட்டது.

அதில், ‘‘கட்சி அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட `சீல்' அகற்றி, அலுவலக சாவியை பழனிசாமி வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த அலுவலகத்துக்கு காவல் துறை தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிமுக தொண்டர்களை ஒரு மாதத்துக்கு அலுவலகத்தில் அனுமதிக்கக் கூடாது’’ என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி, கடந்த 21-ம் தேதி கட்சி அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது. ‘‘நீதிமன்ற ஆணைப்படி, கட்சித்தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஆக. 20-ம் தேதி வரைகட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்று தகவல் பலகையும் வைக்கப்பட்டது.

நீதிமன்றம் விதித்திருந்த ஒரு மாத காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. ஓபிஎஸ்,இபிஎஸ் ஆகியோரது ஆதரவாளர்கள் வந்தால் மோதல் ஏற்படும் என்று கருதி, நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும், நேற்று தொண்டர்கள் யாருமின்றி தலைமை அலுவலகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

தலைமை அலுவலகத்தில் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது, ஆவணங்கள் மற்றும் பொருட்கள் காணாமல் போனது தொடர்பாக, பழனிசாமி தரப்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தொண்டர்கள் யாரும் அலுவலகத்துக்கு வர வேண்டாம் என்று பழனிசாமி தரப்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் நேற்று அதிமுக அலுவலகத்துக்கு தொண்டர்கள் யாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in