

புதிய பொறுப்புகளை ஏற்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் தற்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஜெயலலிதாவின் துறைகளை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார்; அமைச்சரவைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவார் என்று திட்டவட்டமாக அறிவிப்புக் கொடுத்தது மிகவும் வரவேற்கத்தக்க சரியான முடிவு.
பொதுவாக அரசு இயந்திரத்தின் அச்சாணி தலைமைச் செயலாளர்தான்; அவர்தான் அரசு சார்பில் எதற்கும் பொறுப்பேற்று பதில் கூறவேண்டியவர். அவரும் சுறுசுறுப்புடன் இயங்குவது பாராட்டத்தக்கது.
இந்திய அரசமைப்புச் சட்ட விதி 166 ஆவது பிரிவின்படி இதுதான் சரியான நிலைப்பாடு. அப்படி நேற்று வெளிவந்த ஆளுநரின் அறிக்கையில், ''இந்த ஏற்பாடு அனைத்தும் முதல்வரின் அறிவுரையின் பேரில் செய்யப்பட்டுள்ளது'' என்ற வாசகங்கள் அரசாங்கச் செய்திக் குறிப்பில் - இடம் பெற்றுள்ளதுதான் சற்று நெருடலாகவும், விமர்சனங்களுக்கு இடம் அளிப்பதாகவும் உள்ளது என்பதைத் தவிர, மற்றபடி அரசமைப்புச் சட்டப்படியான கடமைகளே இவை.
போதிய பெரும்பான்மையுடன் உள்ள ஆளும் கட்சி, பலமான எதிர்க்கட்சியும், எல்லோரும் இந்த நேரத்தில் ஒரே குரலில் இம்முடிவினை வரவேற்றுள்ளது பாராட்டத்தக்கது.
நமது முதல்வர் விரைவில் முழு நலம் பெற்று பணிக்குத் திரும்பவேண்டும். தலைவர்களின் உடல்நலம் என்பது மக்களின் வல் கொண்டது என்றாலும், தேவையற்ற வீண் வதந்திகளைப் பரப்பக்கூடாது.
புதிய பொறுப்புகளை ஏற்கும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வாழ்த்துகள்'' என்று வீரமணி கூறியுள்ளார்.